Monday, July 30, 2012

வான்சிறப்பு

    வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
    தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. - 11

தி.பொ.ச. உரை:  உலக வாழ்க்கையானது மழையை நம்பியே இருப்பதால் அம் மழையே (உயிர்வாழத் தேவையான) அமிழ்தம் என்று அறியப்படுகிறது.
==============================================

    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை.  - 12

தி.பொ.ச. உரை: நுகர்வோருக்குத் தேவையான நல்ல உணவுப்பொருட்களை விளைவிக்கவும் அவருக்குத் தானே ஒரு உணவுப்பொருளாக இருக்கவும் வல்லது மழையாகும்.
=============================================

    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
    உள்நின்று உடற்றும் பசி.  - 13

தி.பொ.ச. உரை:  மேகம் (மழை பெய்யாது) பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இந்த பரந்த உலகெங்கும் பசியானது நிலையாக இருந்து உயிர்களை வாட்டி வதைக்கும்.
=============================================

    ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
    வாரி வளங்குன்றிக் கால்.  -  14

தி.பொ.ச. உரை:  மழை என்னும் நீரின் வளம் குறைபடுமானால் ஏர் கொண்டு உழமாட்டார் உழவர்.
===========================================

    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை.  - 15

தி.பொ.ச.உரை: (பெய்யாமல் பொய்த்து வறுமையில் உழல வைத்துக்) கெடுதல் செய்ய வல்லதும் கெட்டவர்க்கு ஆதரவாய் ஆங்கே பெய்து ( விளைச்சலைப் பெருக்கி அவரது பொருளாதாரத்தினை) உயர்த்துவதும் மழையே ஆகும்.
===========================================

    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
    பசும்புல் தலைகாண்பு அரிது.  - 16

தி.பொ.ச. உரை: மழைத்துளி விழாவிட்டால் இந்த மண்ணில் பசும்புல்லின் தலையைக் கூடக் காண முடியாது. ( இனி பிற உயிர்களின் நிலையினைக் கூறவும் வேண்டுமோ?)
=========================================

    நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
    தான்நல்கா தாகி விடின்.  - 17

தி.பொ.ச. உரை: (கடலில் இருந்து ஆவியாகிச் சென்ற) மேகங்கள் தாம் அழிந்து மழையினை வழங்காவிடில் நெடிய கடலும் தனது நீர்வளத்தில் குன்றிப்போகும்.
=======================================

    சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.   - 18

தி.பொ.ச. உரை: மேகங்கள் நீரின்றி வறண்டு போனால் இவ் உலகில் பசுக்களுக்கும் சிறப்பும் பூசனையும் நடவாது. ( ஆய்வுக் கட்டுரை)
=======================================

    தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
    வானம் வழங்கா தெனின்.   -  19

தி.பொ.ச. உரை: மேகங்கள் மழையினை வழங்காவிட்டால் இந்த பரந்த உலக மக்களிடத்தில் கொடுத்து உதவும் குணமும் (தானம்) பொறுமையும் (தவம்) ஆகிய இரண்டு நற்பண்புகளும் தங்காது.
======================================

    நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு.   -  20

தி.பொ.ச. உரை: யாராயினும் நேர்மை (வான்) இல்லாவிட்டால் ஒழுக்கம் என்பதில்லை. அதைப்போல மழை இல்லாவிட்டால் இந்த உலகமும் இல்லை.
=====================================

No comments:

Post a Comment

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.